Thursday, November 13, 2008

டேய் மச்சானே

நீ பிறக்கும் போதே நான்
பிறக்கும் வரம் தான் தரவில்லை

நீ இறக்கும் போதே நானும்
இறக்கும் வரமாவது தந்து விடு மச்சான்...

Tuesday, November 11, 2008

கிழிக்கப்படும் ஓர் கடிதம்...


(முதியோர் இல்லத்தில் இருந்து உன் தந்தை எழுதுவது)


நீ பிறந்ததோ
என் மனைவியின் மீதிருந்த என் காதலால்
நான் இங்கு இருப்பதோ
உன் மனைவியின் மீதிருக்கும் உன் காதலால்

உன் வீட்டில் நாய்க்கு கிடைக்கும் இடம் கூட
உன் அப்பன் எனக்கு இல்லை
உன் மனதில் இரக்கமும் இல்லை
என் மனதில் இறக்கமும் இல்லை....

உன் கால் சட்டை நாடாவை
கட்டி விட்டுருக்கிறேன்
என் வேஷ்டியை கூட என்னால்
கட்ட முடியவில்லை இன்று

உன்னை சபிக்க மனமில்லாமல்
வாழ்த்தவே செய்கிறேன்...
உன் மகன் காலத்திலாவது இந்த
முதியோர் இல்லம் இல்லாமல் போகட்டும்...

இப்படிக்கு,
கிழிக்கப்பட்ட ஓர் உறவு

Wednesday, November 5, 2008

பசி தீர்ப்பதால்...

கண்ணில் கண்ணீர் துளிகள்
எனக்காக வெங்காயம் உரித்ததால்...

விரலில் வெட்டு தழும்புகள்
எனக்காக காய்கறி வெட்டியதால்...

கையில் தீப்பட்ட காயங்கள்
எனக்காக சாதம் சமைத்ததால்...

என்னவளே நீயும்
என் தாய் தான்...


களைப்புடன் உன் பேனா


வானத்து நட்சத்திரங்களை புள்ளிகள்
என நினைத்து கோலமிட்டிருப்பேன்
தீர்ந்திருக்காது என் மைத்துளி...

பூமத்திய கடக மகர ரேகைகளை
எண்ணிரெண்டு முறை வரைந்திருப்பேன்
உடைந்திருக்காது என் முனை...

ஏழு கடல் ஊதா நிறங்களை
நிரப்பி எழுதி வற்ற வைத்திருப்பேன்
இருந்திருக்காது என் சுமை...

உன் காதலியின் பெயரை எத்தனை
முறை எழுதுவேன் நான்…

மற்ற எழுத்துக்கள் மறந்து
களைத்து விட்டேன்...

அவள் கண்களுக்கு மையிடும்
வாய்ப்பினை ஒரு முறை கொடு

அவள் நெற்றிக்கு பொட்டிடும்
வாய்ப்பினை ஒரு முறை கொடு


புத்துயிர் பெறுவேன் நான்...

இப்படிக்கு,
களைப்புடன்
உன் பேனா...