Sunday, April 14, 2013

நீ என்னுடன் இருப்பதால்

நீ எனக்கு 
உலக அழகியாக 
எல்லாம் தெரியவில்லை... 

இந்த உலகமே 
அழகாக அல்லவா 
தெரிகிறது...

நீ என்னுடன் இருப்பதால், 

Tuesday, May 12, 2009

பைத்தியக்கார மனது...

நீ சிரிக்கும் போது
உன் கன்னங்களில்
விழும் குழிகளில்
மட்டுமல்ல...

நீ
சூடான பாலை
தம்ளரில் எடுத்து
அது ஆறுவதற்காக
ஊதுகிறாயே
அப்போது அந்த பாலில்
விழும் குழியிலும்

விழுந்திருக்கிறது என்
பைத்தியக்கார மனது...

Monday, May 11, 2009

தோற்றே விட்டேனோ ???


விழுந்தேன் எழ முடியவில்லை
தாய் உதவினாள்
தவழும் போது

விழுந்தேன் எழ முடியவில்லை
தந்தை உதவினார்
படிப்பில் தோற்ற போது

விழுந்தேன் எழ முடியவில்லை
மனைவி உதவினாள்
தொழிலில் தோற்ற போது

விழுந்தேன் எழ முடியவில்லை
கைத்தடி உதவியது
கூனி குறுகிய போது

விழுந்தேன் எழவே முடியவில்லை
மூடிவிட்டார்கள்
கல்லறைக்குள் வைத்து

வாழ்வில் நான் தோற்றே விட்டேனோ ???

தேர்தல்

லட்டினை பாதுகாக்க
ஈக்களுக்கும்
எறும்புகளுக்கும்
இடையே
கடும் போட்டி...

Thursday, April 2, 2009

முதல் கூலி


என் எட்டாவது வயதில்
நான் வாங்கிய முதல் கூலி
விளம்பர பலகை ஏந்தியதற்கு
"குழந்தை தொழிலாளர் ஒழிப்போம்" என்று...

Wednesday, February 11, 2009

நீ தரும் நினைவு


சிறு நெல்லிக்காயில்
உன் நுனி நாக்கினால்
எச்சில் வைத்து

அந்த ஈரத்தில்
உப்பினை தடவி
எனக்கு தரும் போதும்

நினைவுபடுத்துகிறாய்
என் அம்மாவையே ............

Monday, February 2, 2009

நன்றி

நீ என் தோள் சாய்ந்து
தூங்கிக் கொண்டிருந்தாய்...

நான் உன்னை பற்றியே
கவலை கொண்டிருந்தேன்...

அப்போது
உன் கூந்தலினால்
என் கன்னங்களை
பரிசிக்க செய்து
ஆறுதல்படுத்தியது
ஜன்னலில் புகுந்த
தென்றல் காற்று....

என் கண்களும்
கவலை மறந்து
இமைகளை
போர்த்திக்கொண்டு
தூங்க ஆரம்பித்தன...

நன்றி
தென்றலுக்கா ??
உன் கூந்தலுக்கா ???

Monday, December 29, 2008

எப்போதும்...

நிலவின் ஒளி இரவில் தான்…
சூரியனின் வெப்பம் பகலில் தான்…
தென்றலின் இதம் வசந்தத்தில் தான்…
பனியின் அழகு மார்கழியில் தான்…


என் இதயத்தின் காதல் எப்போதும்
வருடங்கள்
மாதங்கள்
வாரங்கள்
நாட்கள்
மணி
நிமிடம்
நொடி என…

Friday, December 19, 2008

நீ தூங்கும் நேரத்தில்


என்
இதய துடிப்பினை கூட
நிறுத்திடுவேன் …

அது
உன் தூக்கத்திற்கு
இடையூறானால்...

நீ
என் மார்பில்
தலை வைத்து
தூங்கிடும் போது...